சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

12.720   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்

-
மூல மான திருத்தொண்டத்
தொகைக்கு முதல்வ ராய்இந்த
ஞாலம் உய்ய எழுந்தருளும்
நம்பி தம்பி ரான்தோழர்
காலை மலர்ச்செங் கமலக்கண்
கழறிற் றறிவா ருடன்கூட
ஆல முணடார் திருக்கயிலை
அணைந்தது அறிந்த படியுரைப்பாம்.

[ 1]


திருத்தொண்டர்களின் வரலாற்றைக் கூறும் இந் நூலுக்கு மூல நூலான திருத்தொண்டத் தொகை அருளிச் செய்வதற்கு உரிமையுடைய முதல்வராக, இந்நிலவுலகம் உய்யும் பொருட்டு எழுந்தருளி வந்த நம்பியாரூரரான தம்பிரான் தோழர், காலைப் பொழுதில் மலரும் தன்மையுடைய செந்தாமரை மலர் போன்ற கண்களையுடைய கழறிற்றறிவார் நாயனாருடன் கூட, நஞ்சை உண்ட இறைவரின் திருக்கயிலை மலையை அடைந்த வரலாற்றை அறிந்த வகையில் கூறுவாம். *** 'மற்றிதற்குப் பதிகம் . . . . திருத்தொண்டத்தொகை எனப் பெற்ற நற்பதிகம் தொழப் பெற்றதாம்' என முற்கூறியதும் நினைவு கூர்தற்குரியது.
படியில் நீடும் பத்திமுதல்
அன்பு நீரில் பணைத்தோங்கி
வடிவு நம்பி யாரூரர்
செம்பொன் மேனி வனப்பாகக்
கடிய வெய்ய இருவினையின்
களைகட் டெழுந்து கதிர்பரப்பி
முடிவி லாத சிவபோகம்
முதிர்ந்து முறுகி விளைந்ததால்.

[ 2]


இவ்வுலகில் நீடிய பத்தி என்னும் நாற்றானது, அன் பான நீரினால் பெருத்து, மேல் எழுந்து, நம்பியாரூரின் சிவந்த பொன் னான அழகிய திருமேனியே தம் வடிவாக, வலியதும் கொடியதுமான இருவினைகள் என்னும் களையை விரைந்துஅகற்றி மேல் ஓங்கி எழுந்து, ஞானக் கதிர்களான கிளைகளைப் பரப்பி, அழிவற்ற 'சிவபோகம்' என்னும் பழம் முதிர்ச்சி பெற்று மிகவும் விளைந்தது. *** படி - உலகு. பத்தி முதல் - பத்தியான நாற்று. களைகட்டல் - களையைப் பறித்தல்; 'களை கட்டதனொடுநேர்' (குறள், 550) என்னும் திருக்குறளும். கடிய வினை, வெய்ய வினை எனத் தனித் தனியே கூட்டுக; கடுமை- உயிரால் தாமாக அகற்ற முடியாமை; கொடுமை - அதன் பயனைத் தாங்க இயலாமை. முதிர்தல் - விளைதல். முறுகுதல் - உள்ளீடாக செறிந்திருத்தல்; மையல் மானுடமாய் மயங்கி இருந்த நிலையில், இறைவன் தடுத்தாட்கொள்ள, அக்கருணைப் பெருக்கின் வழி வளர்ந்து வாழ்ந்து, அருளுடைய தலைவராய் மீண்டும் திருக்கயிலை சென்று பெருமானின் திருவடிக் கண் நின்று, பணி செய்ய இருக்கும் வரலாற்றைக் கூறும் பகுதியாக இருத்தலின், ஆரூரரை முதிர்ந்து முறுகி விளைந்த சிவபோகமாக ஆசிரியர் உருவகித்துப் போற்றுகின்றார்.
ஆரம் உரகம் அணிந்தபிரான்
அன்பர் அணுக்க வன்தொண்டர்
ஈர மதுவார் மலர்ச்சோலை
எழிலா ரூரில் இருக்குநாள்
சேரர் பெருமாள் தனைநினைந்து
தெய்வப் பெருமான் கழல்வணங்கிச்
சாரல் மலைநா டணைவதற்குத்
தவிரா விருப்பி னுடன்போந்தார்.

[ 3]


மாலையாகப் பாம்பை அணிந்த சிவபெருமானின் திருவடிக்கண் நெருக்கமாக நிற்கும் வன்தொண்டர், குளிர்ந்த தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைககள் சூழ்ந்த அழகிய திருவாரூரில் இருக்கும் நாள்களில், சேரமான் பெருமாள் நாயனாரை நினைந்து, தெய்வப் பெருமானான தியாகராசப் பெருமானை வணங்கி, அருள் விடை பெற்றுச் சாரல்களையுடைய மலைநாட்டை அணைவதற்குத் தடுத்தற்கரிய பெரு விருப்புடன் சென்றார். *** உரகம் - பாம்பு. அணுக்கப்பணி - திருவடிக்கண்ணேயே இருந்து செய்யும் பணிகள்; திருமுழுக்காட்டுதல், திருமாலை அணி வித்தல் முதலாயின. திருக்கயிலையில் இதற்குமுன்பு ஆற்றியும் இனியும் ஆற்றவும் இருக்கும் திருத்தொண்டை நினைவு கூர்ந்து கூறல் பெற்றது. சாரல் - மழைச் சாரல்கைளை ஏற்று நிற்கும் மலைப்பாங்கான இடங்கள்.
நன்னீர்ப் பொன்னித் திருநாட்டு
நாதர் மகிழுந் திருப்பதிகள்
முன்னி இறைஞ்சி அகன்றுபோய்
முல்லைப் படப்பைக் கொல்லைமான்
துன்னி உகைக்குங் குடக்கொங்கில்
அணைந்து தூய மதிவான்நீர்
சென்னி மிசைவைத் தவர்செல்வத்
திருப்புக் கொளியூர் சென்றடைந்தார்.

[ 4]


நல்லநீரைப் பொருந்திய காவிரிநாடான சோழ நாட்டில், அவ்வவ்விடத்தும் இறைவர் வீற்றிருந்தருளும் திருப்பதி களை நினைந்தும் வணங்கியும் நீங்கிச் சென்று, முல்லை நிலச் சார்புடைய காடுகளிலும் தோட்டங்களிலும் பயின்று வரும் மான்கள் துள்ளி விளையாடுவதற்கு இடமான மேல் கொங்கு நாட்டை அடைந்து, தூய பிறையையும் கங்கையையும் தலையில் அணிந்த இறைவரின் செல்வம் நிறைந்த திருப்புக்கொளியூர் அவிநாசியைச் சென்று அடைந்தார். *** முல்லைப் படப்பை - பசும்புற்காடுகளும், அவற்றைச் சார்ந்த இடங்களும். கொல்லைமான் - அவ்விடத்துள்ள தோட்டங் களில் பயின்றுவரும் மான்கள். குடக் கொங்கு - மேற்பாலதாய கொங்கு நாடு; கீழ்க் கொங்கு, மேல் கொங்கு, வட கொங்கு எனக் கொங்கு நாட்டை மூவகையாகப் பிரித்துக் கூறுவர். அவற்றுள் மீகொங்குஎனப்பெறும் மேற்குப் பகுதியில் உள்ள கொங்கு நாடு. 'மீகொங்கில் அணிகாஞ்சிவாய்ப் பேரூரர் பெருமானை' என வரும் திருமுறைத் திருவாக்கும் காண்க.
மறையோர் வாழும் அப்பதியின்
மாட வீதி மருங்கணைவார்
நிறையுஞ் செல்வத் தெதிர்மனைகள்
இரண்டில் நிகழ்மங் கலஇயங்கள்
அறையும் ஒலியொன் றினில்ஒன்றில்
அழுகை ஒலிவந் தெழுதலும் ஆங்கு
உறையும் மறையோர் களைஇரண்டும்
உடனே நிகழ்வ தென்னென்றார்.

[ 5]


அப்பதியில்மறையவர் வாழும் மாடவீதியின் பக்கத்தில் செல்பவரான நம்பியாரூரர், நிறைந்த செல்வத்துடன் எதிர் எதிராய் அமைந்த இரு இல்லங்களில், ஓர் இல்லத்தில் மங்கலத் தொழில்களுக்கான இயங்களின் ஒலியும், மற்றொன்றில் அழுகை ஒலியும் வர, அவற்றைக் கேட்டு, அங்கு வாழும் அந்தணர்களைப் பார்த்து மாறுபட்ட இவ்வீர் ஒலிகளும் ஒரே காலத்தில் நிகவதற்குக் காரணம் யாது? என வினவினார். *** 'ஓரில் நெய்தல் கறங்க ஓரில் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப . . . . . . . . . . . . . . . . . . . . இன்னாதம்ம இவ்வுலகம்' எனவரும் புறநாநூற்றுப் பாடற் கருத்தை நினைவூட்டும்.
Go to top
அந்த ணாளர் வணங்கிஅரும்
புதல்வர் இருவர் ஐயாண்டு
வந்த பிராயத் தினர்குளித்த
மடுவில் முதலை ஒருமகவை
முந்த விழுங்கப் பிழைத்தவனை
முந்நூல் அணியுங் கலியாணம்
இந்த மனைமற் றந்தமனை
இழந்தார் அழுகை யென்றுரைத்தார்.

[ 6]


அவ்வந்தணர்கள் நம்பியாரூரரை வணங்கி, அரிய மைந்தர் இருவர், ஐந்து வயது உடையவர்கள், குளித்த நீர் நிலையில் ஒரு பிள்ளையை முதலை முன் விழுங்கி விடத் தப்பிப் பிழைத்த பிள்ளைக்குப் பூணூல் அணிவிக்கும் மங்கலமான செயல் நிகழ்வது இவ்வில்லத்தில், மற்றொரு பிள்ளையை இழந்தவரின் அழுகை நிகழ்வது அவ்வில்லத்தில் என்று விடை கூறினார்.
குறிப்புரை:

இத்தன் மையினைக் கேட்டருளி
இரங்குந் திருவுள் ளத்தினராம்
மொய்த்த முகைத்தார் வன்தொண்டர்
தம்மை முன்னே கண்டிறைஞ்ச
வைத்த சிந்தை மறையோனும்
மனைவி தானும் மகவிழந்த
சித்த சோகந் தெரியாமே
வந்து திருத்தாள் இறைஞ்சினார்.

[ 7]


இத்தன்மையைக் கேட்டு இரக்கம் உடைய திருவுள்ளத்தைக் கொண்ட, மலர்கள் நிறைந்த மாலையைச் சூடிய சுந்தரரைப் பார்த்து, வணங்க வேண்டும் என்று மனம் கொண்டிருந்த அவ் வேதியரும் அவருடைய மனைவியும், தம் மகவை இழந்த மனவருத்தத்தையும் அறியாராய் வந்து, அவருடைய திருவடிகளை வணங்கினர்.
குறிப்புரை:

துன்பம் அகல முகமலர்ந்து
தொழுவார் தம்மை முகநோக்கி
இன்ப மைந்தன் தனையிழந்தீர்
நீரோ என்ன எதிர்வணங்கி
முன்பு புகுந்து போனதது
முன்னே வணங்க முயல்கின்றோம்
அன்பு பழுதா காமல்எழுந்
தருளப் பெற்றோம் எனத்தொழுதார்.

[ 8]


மகனை இழந்த துன்பம் நீங்க, முகம் மலர்ந்து தொழுபவரான அந்தணரையும் அவர்தம் மனைவியாரையும் சுந்தரர் பார்த்து 'இன்ப மகனை இழந்தவர் நீங்களோ?' என்று வினவ அவர்கள் 'இந் நிகழ்ச்சி முற்காலத்தில் நிகழ்ந்து கழிந்தது, முற்படத் தங்களைக் கண்டு வணங்க முயல்கின்றோம், எங்களின் அன்பு வீண் போகாது தாங்கள் இங்கு எழுந்தருளும் பேற்றைப் பெற்றோம்' என்று உரைத்தனர். *** எனவே இவர்கள் நம்பிகளைக் கேள்வி அளவான் அறிந்த அளவிலேயே கண்டும் வணங்கியும் மகிழ நினைந்தனர் என்பது தெரிகிறது.
மைந்தன் தன்னை இழந்ததுயர்
மறந்து நான்வந் தணைந்ததற்கே
சிந்தை மகிழ்ந்தார் மறையோனும்
மனைவி தானுஞ் சிறுவனையான்
அந்த முதலை வாய்நின்றும்
அழைத்துக் கொடுத்தே அவிநாசி
எந்தை பெருமான் கழல்பணிவேன்
என்றார் சென்றார் இடர்களைவார்.

[ 9]


மைந்தனை இழந்த துன்பத்தையும் மறந்து, நான் வந்த அளவிலேயே அந்தணனும் அவனுடைய மனைவியும் மனம் மகிழ்ந் தனர், 'அச்சிறுவனை விழுங்கிய அந்த முதலையின் வாயினின்றும் இறையருளால் அழைத்துக் கொடுத்தபின்புதான், நான் அவிநாசி யாகிய எம்பெருமானின்திருவடிகளை வணங்குவேன்' என்று தம்மிடம் அன்பால் வந்தவர்களின் துன்பத்தை நீக்குபவரான நம்பியாரூரர் கூறினார். *** நம்பிகள் இங்ஙனம் கூறியதும், அவர்கள் தம்பால் கொண்டிருக்கும் அன்பினால் மட்டுமன்று; அவர்கட்கு அடியவர் மாட்டு இருக்கும் பத்திமையும் கருதியதேயாம். அழைத்துக் கொடுத்தே - திருவருளால் அழைத்துக் கொடுத்த பின்பே. 'கரைக்கால் முதலை யைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே' (தி. 7 ப. 92 பா. 4) என்ப தால், இறைவனை வேண்டியே பெற்றமை அறியலாம்.
'ஈசனது இயல்பு, அருள் எய்து உயிர் இயற்றல்
பேசுதல் தவறு எனப் பெருமறை அறைய
ஐந்தொழில் உயிரும் தந்திடல் தகுமே

இவ்வா றருளிச் செய்தருளி
இவர்கள் புதல்வன் தனைக்கொடிய
வெவ்வாய் முதலை விழுங்கும்மடு
எங்கே என்று வினவிக்கேட்டு
அவ்வாழ் பொய்கைக் கரையில் எழுந்
தருளி அவனை அன்றுகவர்
வைவாள் எயிற்று முதலைகொடு
வருதற் கெடுத்தார் திருப்பதிகம்.

[ 10]


இங்ஙனம் உரைத்தருளிய சுந்தரர் 'இவர்களின் மகனைக் கொடிய கூர்மையான வாயுடைய முதலை விழுங்கிய நீர்நிலை எங்கே உள்ளது?' என்று கேட்டு அறிந்து, அந்த ஆழமான பொய்கையின் கரையில் சென்றருளி, முன்நாளில் விழுங்கிய கூரிய வாள்போன்ற பற்களையுடைய முதலை, அம் மைந்தனை மீளக் கொண்டு வருவதற்குத் திருப்பதிகம் பாடலாயினர். *** மடு எங்குளது? எனக் கேட்டது மற்றவரையாம்; காரணம் பெற்றோரைக் கேட்பின் அவர்களின் வருத்தம் மேலிடும் என்பதா லேயாம். மைந்தனை விழுங்கியது முதலையாதலின் அதனிடத்தின்றே மீளக் கொண்டு வருதற்குப் பதிகம் பாடினார். எது எங்கு ஒடுங்கிற்று? அது அங்கிருந்தே மீளத் தோன்றும் என்னும் மெய்ந் நூல்களும். இத்திருப்பதிகம் 'எற்றான் மறக்கேன்' (தி. 7 ப. 92) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.
Go to top
உரைப்பார் உரையென் றெடுத்ததிருப்
பாட்டு முடியா முன்உயர்ந்த
வரைப்பான் மையின்நீள் தடம்புயத்து
மறலி மைந்தன் உயிர்கொணர்ந்து
திரைப்பாய் புனலின் முதலைவயிற்
றுடலிற் சென்ற ஆண்டுகளும்
தரைப்பால் வளர்ந்த தெனநிரம்ப
முதலை வாயில் தருவித்தான்.

[ 11]


பாடிய அப்பதிகத்தில் 'உரைப்பார் உரை' எனத் தொடங்கிய திருப்பாட்டு நிறைவு பெறுதற்கு முன்பே, உயர்ந்த மலையனைய நீண்ட பெரிய தோள்களையுடைய கூற்றுவன், மகனின் உயிரைக் கொண்டு வந்து அலைகளையுடைய நீரில், முதலையின் வயிற்றில் நிலத்தில் இருந்து வளர்ந்தது போல் கழிந்த இரண்டு ஆண்டுகளின் வளர்ச்சியும் உடலில் நிரம்ப, முதலையின் வாயில் வரச் செய்தான். *** முந்நூல் அணியும் கலியாணம் ஏழு வயதில் செய்யப் பெறுவதாகும். ஐந்து வயதில் சென்ற அம்மகவு இறந்து இப்பொழுது மீளத் தோன்றுகிறது. எனவே, முதலை வாயுள் இரண்டாண்டுகள் சென்றன என்பதும் பெறுதும். 'உரைப்பார் உரை' எனத் தொடங்கும் பாடல், பதிகத்தின் நான்காவது பாடலாகும். (தி. 7 ப. 92 பா. 4)உரைப்பார் உரை உகந்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய்அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியேகரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே' என்பது அப் பாடலாகும். முதலை உண்ட பாலனை மீண்டும் தந்துதவ வேண்டும் என்ற வேண்டுகோள், இப்பதிகத்தின் 1, 2, 4, 9 ஆகிய நான்கு பாடல்களில் உள்ளது. அவற்றுள் இந்நான்காவது பாடலை நிறைவு படுத்தற்கு முன்னாகவே முதலை உண்ட பாலன் உரிய வயதும் நிரம்பப் பெற்ற அளவில், மீளத் தோன்றினான் எனச் சேக்கிழார் அருளுகின்றார். அங்ஙனம் தோன்றப் பெற்ற பின்னும் 9ஆவது பாடலில் 'குளத்திடை, உள்ளாடப்புக்க மானி என்னைக் குறி செய்ததே' என அருளக் காரணம் இல்லை. ஆனால் சேக்கிழார் பெருமான் திருவுள்ளம் உண்மை உணராத திருவுள்ளமும் அன்று. ஆதலின் இப்பொழுது 9ஆவது பாடலாக இருப்பது 4ஆவது பாடலுக்கு முன்னம் மூன்றாவது பாடலாக இருக்கவேண்டும் என அறியப் படுகின்றது. 'சதுரம் மறை' (தி. 2 ப. 37) எனத் தொடங்கும் பாடலி லேயே கதவம் மூடப்பட்டது என்று அருளியதற்குக் காரணம், அப்பாடலின் பின் கதவம் திருக்காப்புக் கொள்ளும் குறிப்பாக ஏதும் இன்மையே ஆகும். இவ்வுண்மையையும் ஈண்டு நினைவு கூர்க.
பெருவாய் முதலை கரையின்கண்
கொடுவந் துமிழ்ந்த பிள்ளைதனை
உருகா நின்ற தாய்ஓடி
எடுத்துக் கொடுவந் துஉயிரளித்த
திருவா ளன்தன் சேவடிக்கீழ்ச்
சீல மறையோ னொடுவீழ்ந்தாள்
மருவார் தருவின் மலர்மாரி
பொழிந்தார் விசும்பில் வானோர்கள்.

[ 12]


பெரிய வாயினின்றும் முதலை கரையில் கொணர்ந்து உமிழ்ந்த அம் மைந்தனை, மீதூர்ந்த அன்பால் உள்ளம் உருகிய தாய் ஓடிப்போய், எடுத்துக் கொண்டு வந்து உயிரைத் திரும்பத் தந்த திருவாளர் நம்பியாரூரரின் சேவடியின் கீழ்ச் சைவ ஒழுக்கம் மிக்க மறையவனுடன் சேர்ந்து வணங்கினாள். தேவர்கள் விண்வழித் தெய்வ மலர்களைச் சொரிந்தனர்.
குறிப்புரை:

மண்ணில் உள்ளார் அதிசயித்தார்
மறையோர் எல்லாம் உத்தரியம்
விண்ணில் ஏற விட்டார்த்தார்
வேத நாதம் மிக்கெழுந்தது
அண்ண லாரும் அவிநாசி
அரனார் தம்மை அருமறையோன்
கண்ணின் மணியாம் புதல்வனையுங்
கொண்டு பணிந்தார் காசினிமேல்.

[ 13]


மண்ணுலகில் உள்ளவர்கள் அதைக்கண்டு வியப் புக்கொண்டனர். அந்தணர்கள் அனைவரும் தம் மேலாடைகளை விண்ணில் வீசி எறிந்து மகிழ்வொலி செய்தனர். தேவ ஒலி மிக்கு எழுந்தது. நம்பியாரூரரும் அவிநாசியின்கண் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை, அந்தணரின் கண்மணி போன்ற மகனையும் அழைத் துக்கொண்டு சென்று பணிந்தார். *** உத்தரியம் - மேலாடை
பரவும் பெருமைத் திருப்பதிகம்
பாடிப் பணிந்து போந் தன்பு
விரவு மறையோன் காதலனை
வெண்ணூல் பூட்டி அண்ணலார்
முரசம் இயம்பக் கலியாணம்
முடித்து முடிச்சே ரலர்தம்பால்
குரவ மலர்பூந் தண்சோலை
குலவு மலைநாடு அணைகின்றார்.

[ 14]


போற்றுதற்கு உரிய பெருமை வாய்ந்த திருப்பதிகத் தைப் பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி, வணங்கி, வெளியே போந்த பெருமையுடைய சுந்தரர், தம்மிடம் அன்புடைய வேதியரின் மக னுக்கு முரசுகள் ஒலிக்க முந்நூல் அணியும் கலியாணம் செய்வித்து, முடிமன்னரான சேரனாரிடத்துச் சேர்வதற்குக் குரா மலர்கள் நிறைந்த குளிர்ந்த சோலைகள் மிக்க மலைநாட்டை நோக்கிச் செல்லலானார். *** 'பரவும் திருப்பதிகம் பாடி' என்பதால், இப்பதிகத்துள் உள்ள முதல் 4 பாடல்களையும் குளக்கரையில் பாடியவர், எஞ்சிய 6 பாடல்களையும் திருக்கோயிலுக்குள் சென்று, இறைவன் திருமுன் நின்று பாடி நிறைவு செய்தார் என்பது விளங்குகிறது.
சென்ற சென்ற குடபுலத்துச்
சிவனார் அடியார் பதிகள் தொறும்
நன்று மகிழ்வுற்று இன்புற்று
நலஞ்சேர் தலமுங் கானகமும்
துன்று மணிநீர்க் கான்யாறும்
துறுகற் சுரமுங் கடந்தருளிக்
குன்ற வளநாட் டகம்புகுந்தார்
குலவும் அடியேன் அகம்புகுந்தார்.

[ 15]


அடியேனுடைய உள்ளத்தில் குடிபுகுந்தவரான நம்பியாரூரர் , மேற்குத் திசையில் உள்ள நாட்டில், அங்கங்கும் சிவபெருமானை வணங்கி மகிழ்ந்த வண்ணம் அடியவர்களின் பதிகள் தோறும் சென்று, மிகவும் மகிழ்ந்து, இன்பம் அடைந்து, நன்மை யுடைய மேலும் பல திருப்பதிகளையும், நிரம்பிய மணிகளை உடைய நீர் பொருந்திய காட்டாறுகளையும் பெருங்கற்கள் பொருந்திய கானகங்களையும் கடந்து சென்று வளமுடைய மலை நாட்டுக்குள் புகுந்தார். *** துறுகல் - பெருங்கற்கள்.
Go to top
முன்னாள் முதலை வாய்ப்புக்க
மைந்தன் முன்போல் வரமீட்டுத்
தென்னா ரூரர் எழுந்தருளா
நின்றார் என்று சேரர்பிராற்கு
அந்நாட் டரனார் அடியார்கள்
முன்னே ஓடி அறிவிப்பப்
பொன்னார் கிழியும் மணிப்பூணும்
காசுந் தூசும் பொழிந்தளித்தார்.

[ 16]


'முன் நாளில் முதலையால் விழுங்கப்பட்ட மைந் தனை வளர்ந்த நிலையில் உயிர்பெற்று வர மீட்டுத் தந்த தென்திரு ஆரூரர் வருகின்றார்' என்று அறிந்து, அந்நாட்டில் உள்ள சிவனடி யார்கள் ஓடிச் சென்று சேரமான் பெருமாளுக்கு அறிவிக்க, அங்ஙனம் அறிவித்தவர்களுக்கெல்லாம், சேரமான் பொற்கிழியும், அழகிய அணிகளும் ஆடையும் மழைபோல் மிகுதியாக வழங்கினார்.
குறிப்புரை:

செய்வ தொன்றும் அறியாது
சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்துஎன்
ஐயன் அணைந்தான் எனையாளும்
அண்ணல் அணைந்தான் ஆரூரில்
சைவன் அணைந்தான் என் துணையாம்
தலைவன் அணைந்தான் தரணியெலாம்
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று
ஓகை முரசம் சாற்றுவித்தார்.

[ 17]


செய்வது இன்னது என்று ஒன்றும் தோன்றாமல் உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சி மேலிட்டு, 'என் ஐயனான நம்பியாரூரர் வந்தணைந்தார்! என்னை ஆட்கொள்ளும் பெருமையுடையவர் வந்து அணைந்தார்!, திருவாரூரில் மகிழ்ந்தருளும் சைவப் பெருமகனார் வந்து அணைந்தார்! என் துணைவரான தலைவர் வந்து அணைந்தார். உலகம் எல்லாம் உய்யும் பொருட்டு இவ்வுலகில் தோன்றிய நம்பி ஆரூரர் வந்து அணைந்தார்'! எனப் பலவாறு எடுத்துப் போற்றி மகிழ்ச்சியால் முரசத்தை எங்கும் அறையுமாறு செய்வித்தார்.
குறிப்புரை:

பெருகும் மதிநூல் அமைச்சர்களை
அழைத்துப் பெரியோ ரெழுந்தருளப்
பொருவில் நகரம் அலங்கரித்துப்
பண்ணிப் பயணம் புறப்படுவித்
தருவி மதமால் யானையினை
அணைந்து மிசைகொண் டரசர்பெருந்
தெருவு கழிய எதிர்வந்தார்
சேரர் குலம்உய்ந் திடவந்தார்.

[ 18]


பெருகிய மதிநுட்பம் நூலொடு அமைந்த அமைச்சர் களை வரவழைத்து, பெரியவரான நம்பியாரூரர் எழுந்தருளுவ தற்காக அந் நகரத்தை அழகுபெறச் செய்து, செலவு மேற்கொளச் செய்து, அருவிபோல் பாயும் மதத்தையுடைய யானையைச் சேர்ந்து, அதன் மீது சேரர் குலம் உயர்ந்திடத் தோன்றிய சேரலனார் அமர்ந்து, மன்னர்களின் பெருந்தெருவு கழிந்திட, எதிர்கொள்ளும் பொருட்டு வந்தார்.
குறிப்புரை:

மலைநாட் டெல்லை யுட்புகுத
வந்த வன்தொண் டரைவரையில்
சிலைநாட் டியவெல் கொடித்தானைச்
சேரர் பெருமான் எதிர்சென்று
தலைநாட் கமலப் போதனைய
சரணம் பணியத் தாவில்பல
கலைநாட் டமுத ஆரூரர்
தாமுந் தொழுது கலந்தனரால்.

[ 19]


மலை நாட்டு எல்லைக்குள் புகுந்து வரும் சுந்தரரை, மேருமலையின் உச்சியில் தம் விற்கொடியைப் பொறித்த வெற்றிக் கொடியையும் படைகளையும் உடைய சேரமான் எதிர் கொண்டு சென்று, அன்று மலர்ந்த தாமரை மலர் போன்ற அடிகளை வணங்கக் குற்றம் அற்ற அமுதமயமான பலகலைகளையும் தம்அருட்புலமை நலத்தால் நிலைபெறுவிக்கும் சுந்தரரும் எதிர்தொழுது இருவரும் மனம் கலந்தனர்.
குறிப்புரை:

சிந்தை மகிழும் சேரலனார்
திருவா ரூரர் எனும்இவர்கள்
தந்தம் அணிமே னிகள்வேறாம்
எனினும் ஒன்றாந் தன்மையராய்
முந்த எழுங்கா தலின்தொழுது
முயங்கி உதியர் முதல்வேந்தர்
எந்தை பெருமான் திருவாரூர்ச்
செல்வம் வினவி யின்புற்றார்.

[ 20]


மலை நாட்டு எல்லைக்குள் புகுந்து வரும் சுந்தரரை, மேருமலையின் உச்சியில் தம் விற்கொடியைப் பொறித்த வெற்றிக் கொடியையும் படைகளையும் உடைய சேரமான் எதிர் கொண்டு சென்று, அன்று மலர்ந்த தாமரை மலர் போன்ற அடிகளை வணங்கக் குற்றம் அற்ற அமுதமயமான பலகலைகளையும் தம்அருட்புலமை நலத்தால் நிலைபெறுவிக்கும் சுந்தரரும் எதிர்தொழுது இருவரும் மனம் கலந்தனர். *** திருவாரூர்ச் செல்வம் - திருவாரூரில் எழுந்தருளி இருக்கும் இறைவனின் அருட்டிறங்கள். 'திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார்' என்றார் முன்னும்.
Go to top
ஒருவர் ஒருவ ரில்கலந்து
குறைபா டின்றி உயர்காதல்
இருவர் நண்பின் செயல்கண்ட
இரண்டு திறத்து மாந்தர்களும்
பெருகு மகிழ்ச்சி கலந்தார்த்தார்
பெருமாள் தமிழின் பெருமாளை
வருகை வரையின் மிசையேற்றித்
தாம்பின் மதிவெண் குடைகவித்தார்.

[ 21]


ஒருவர் ஒருவருள் உள்ளம் கலக்க எவ்வகையான குறைவும் இல்லாமல் உயர்வான பெருவிருப்பம் உடைய இருவரின் நட்புச் செயலைக் கண்ட இருசார் மக்களும், பெருமகிழ்ச்சி அடைந்து மகிழ்வொலி செய்தனர். சேரமானார் நம்பியைத் தாம் ஏறி வந்த யானையின் மீது ஏற்றித் தாம் அவர் பின் அமர்ந்து, முழுமதி போன்ற வெண்கொற்றக் குடையை ஏந்தினார்.
குறிப்புரை:

உதியர் பெருமாள் பெருஞ்சேனை
ஓதங் கிளர்ந்த தெனஆர்ப்பக்
கதிர்வெண் திருநீற் றன்பர்குழாம்
கங்கை கிளர்ந்த தென ஆர்ப்ப
எதிர்வந் திறைஞ்சும் அமைச்சர்குழாம்
ஏறும் இவுளித் துகளார்ப்ப
மதிதங் கியமஞ் சணியிஞ்சி
வஞ்சி மணிவா யிலையணைந்தார்.

[ 22]


சேரர் பெருமகனாரின் பெரும்படை, கடல் ஒலிப்பதைப் போல் ஒலிக்க, ஒளிவீசும் வெண்மையான திருநீற்றை அணிந்த அன்பர் கூட்டம் கங்கையாற்றின் முழக்கம் எனப் பேரொலி எழுப்ப, எதிர் வந்து வணங்கும் அமைச்சர் கூட்டங்கள் ஏறிவரும் குதிரைகளின் காலிலிருந்து எழும் மண் துகள் எங்கும் எழுந்து பரவ, சந்திரன் தவழும் மேகங்கள் படியும் மதில்களையுடைய வஞ்சி நகரத் தின் அழகான மணிவாயிலை அவ்விருவரும் அடைந்தனர். *** கங்கை நீர் வெண்மையானது. ஆதலின் அதனை வெண் திருநீறணிந்த அன்பருக்கு உவமையாக்கினார். மஞ்சு அணி இஞ்சி - மேகம் தவழும் மதில்.
ஆரண மொழிகன் முழங்கிட
ஆடினர் குணலைகள் அந்தணர்
வாரண மதமழை சிந்தின
வாசிகள் கிளரொலி பொங்கின
பூரண கலசம் மலிந்தன
பூமழை மகளிர் பொழிந்திடும்
தோரண மறுகு புகுந்தது
தோழர்கள் நடவிய குஞ்சரம்.

[ 23]


மறை மொழிகளைச் சொல்லும் ஒலி முழங்க, மறையவர்கள் பெருமகிழ்வால் கைதட்டிக் கூத்தாடினர். யானைகள் மழைபோல மதநீரைச் சொரிந்தன, குதிரைகள் எழுச்சி மிகுதியால் கனைத்தன. நிறைகுடங்கள் எங்கும் மலிந்து விளங்கின. மங்கலப் பெண்கள் பூமழை பொழிகின்ற தோரணம் நிறைந்த தெருவில் தோழர் கள் ஆகிய சேரமானும் நம்பிஆரூரரும் ஊர்ந்து வந்த யானை புகுந்தது. *** குணலை - கைதட்டி ஒலித்தவாறு ஆடுதல். மகிழ்ச்சியின் விளைவால் நிகழ்வது. தோழர்கள் - ஆரூரரும் சேரர் பெருமானும் குஞ்சரம் புகுந்தது என ஒருமையால் கூறினார், இருவரும் ஊர்ந்து வந்த யானை ஒன்றேயாதலின். பாடல்கள் 21 - 24 காண்க.
அரிவையர் தெருவில் நடம்பயில்
அணிகிளர் தளிரடி தங்கிய
பரிபுர வொலிகள் கிளர்ந்தன
பணைமுர சொலிகள் பரந்தன
சுரிவளை நிரைகள் முரன்றன
துணைவர்கள் இருவரும் வந்தணி
விரிதரு பவன நெடுங்கடை
விறன்மத கரியி னிழிந்தனர்.

[ 24]


வீதியில் ஆடற்பெண்கள் நடம் பயில்வதால், அழகு பொருந்திய தளிர் போன்ற கால்களில் பொருந்திய சிலம்புகள் ஒலித்தன. பெரிய முரசுகளின் ஒலிகள் பரந்தன. சுழிந்த சங்குக் கூட்டங்கள் வரிசையாக ஒலித்தன. நண்பர்கள் இருவரும் வந்து அழகு மிகுந்த அரண்மனையின் நீண்ட வாயிலில், தாம் செலுத்தி வந்த வலிமை மிக்க யானையினின்றும் இறங்கினர். *** பணை முரசு - பெரிய முரசு.
தூநறு மலர்தர ளம்பொரி
தூவிமுன் இருபுடை யின்கணும்
நான்மறை முனிவர்கள் மங்கல
நாமநன் மொழிகள் விளம்பிட
மேனிறை நிழல்செய வெண்குடை
வீசிய கவரி மருங்குற
வானவர் தலைவரும் நண்பரும்
மாளிகை நடுவு புகுந்தனர்.

[ 25]


தூய மணமுடைய மலர்களையும், முத்துக்களையும் பொரிகளையும் தூவி, முன் இரு பக்கங்களிலும் நான்மறைகளில் வல்ல முனிவர்கள் மங்கலமுடைய நல்ல சொற்களைச் சொல்ல, மேலே வெண்கொற்றக் குடை, நிறைந்த நிழல் பரப்ப, வெண் சாமரைகள் இருமருங்கும் வீசப்பட, சேரமானும் நம்பியாரூரரும் அரண்மனை யின் நடுவே புகுந்தனர்.
குறிப்புரை:

Go to top
அரியணை யதனில் விளங்கிட
அடன்மழ விடையென நம்பியை
வரிமலர் அமளி அமர்ந்திட
மலையர்கள் தலைவர் பணிந்தபின்
உரிமைநல் வினைகள் புரிந்தன
உரைமுடி விலவென முன்செய்து
பரிசனம் மனமகி ழும்படி
பலபட மணிநிதி சிந்தினர்.

[ 26]


நம்பியாரூரரை, அரியணையில், வண்டுகள் மொய்த்த மலர்கள் பரப்பிய பூந்தவிசில், வலிய ஆனேற்றைப் போல் விளக்கம் பொருந்த வீற்றிருக்கும்படி, மலை நாட்டவரின் மன்னரான சேரர் வணங்கி வேண்டிக் கொண்ட பின்பு, விரும்பியனவான நல்ல பூசனைகளைச் சொல் அளவில் அடங்காதவாறு முன்னே செய்து, உடன் வந்தவர்கள் மகிழும்படி பலவாறாக மணிகளை வாரி வழங்கினர். *** நம்பியாரூரரை, அரியணையில், வண்டுகள் மொய்த்த மலர்கள் பரப்பிய பூந்தவிசில், வலிய ஆனேற்றைப் போல் விளக்கம் பொருந்த வீற்றிருக்கும்படி, மலை நாட்டவரின் மன்னரான சேரர் வணங்கி வேண்டிக் கொண்ட பின்பு, விரும்பியனவான நல்ல பூசனைகளைச் சொல் அளவில் அடங்காதவாறு முன்னே செய்து, உடன் வந்தவர்கள் மகிழும்படி பலவாறாக மணிகளை வாரி வழங்கினர்.
இன்ன தன்மையில் உதியர்கள்
தலைவர்தாம் இடர்கெட முனைப்பாடி
மன்னர் தம்முடன் மகிழ்ந்தினி
துறையுநாள் மலைநெடு நாட்டெங்கும்
பன்ன கம்புனை பரமர்தந்
திருப்பதி பலவுடன் பணிந்தேத்திப்
பொன்னெ டுந்தட மூதெயில்
மகோதையிற் புகுந்தனர் வன்தொண்டர்.

[ 27]


இவ்வகையில் சேரர்க்குத் தலைவரான கழறிற்றறிவார், உலகிலுள்ள, துன்பம் நீங்கும்படி, திருமுனைப்பாடி நாட்டின் மன்னரான நம்பியாரூரருடன் மகிழ்வுடன் இனிமையாய்க் கூடியிருக்கும் நாளில், வன்தொண்டர், நீண்ட மலை நாட்டில் எங்கும் உள்ள பரமரின் பதிகள் பலவற்றையும் சேரமானுடனே சென்று பணிந்து, வழிபட்டுப் பொன்னால் ஆய நீண்ட பெரிய மதில் சூழ்ந்த மகோதை என்ற நகரினுள் வந்து புகுந்தார். *** மகோதை - சேர நாட்டின் தலைநகராய திருக்கொடுங் கோளுர். பரமர் தம் திருப்பதிகள் பலவாவன: திருச்சிவப்பேரூர், விடைக்குன்று, நாதேச்சுரம், வைக்கம், திருச்செங்குன்றூர், சுசீந்தரம் திருவிதாங்கூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.
ஆய செய்கையின் நாள்பல
கழிந்தபின் அரசர்கள் முதற்சேரர்
தூய மஞ்சனத் தொழிலினில்
தொடங்கிடத் துணைவராம் வன்தொண்டர்
பாய கங்கைசூழ் நெடுஞ்சடைப்
பரமரைப் பண்டுதாம் பிரிந்தெய்தும்
சேய நன்னெறி குறுகிடக்
குறுகினார் திருவஞ்சைக் களந்தன்னில்.

[ 28]


இவ்வாறாய செய்கையால் பல நாள்கள் கழிந்த பின்பு, ஒரு நாள், முடியுடை வேந்தர்களுள் முன் வைத்து எண்ணப் படுகின்ற சேரர் பெருமானார் தூய நீராடுதலைச் செய்தருளும் தொழிலில் முற்பட, அவருடைய தோழரான வன்தொண்டர், பரந்த கங்கையைச் சூழ முடித்த நீண்ட சடையையுடைய சிவபெருமானை, முன்னை நிலையில் தாம் பிரிந்து போந்து, இவ்வுலகத்தில் வந்த சேயதான நல்ல நெறியானது நிறைவுறும் எல்லைவரத் திருவஞ்சைக் களத்தை அடைந்தார். *** மேல் 'அம்மெல்லியலாருடன் காதல் இன்பம் கலந்து அணைவாய்' என இறைவன் அருளிய கால எல்லை குறுகிட, அஞ் சைக்களத்துக் கோயிலுக்குட் சென்றார்.
கரிய கண்டர்தங் கோயிலை
வலங்கொண்டு காதலால் பெருகன்பு
புரியும் உள்ளத்தர் உள்ளணைந்
திறைவர்தம் பூங்கழல் இணைபோற்றி
அரிய செய்கையில் அவனியில்
வீழ்ந்தெழுந்து அலைப்புறு மனைவாழ்க்கை
சரிய வேதலைக் குத்தலை
மாலையென் றெடுத்தனர் தமிழ்மாலை.

[ 29]


கரிய கழுத்தையுடைய சிவபெருமானின் கோயிலை வலமாக வந்து, பெருவிருப்பம் மிக்கு ஓங்குதலால் பெருகிய அன்பே சிந்தை முழுதும் இடங்கொள்ளப் பெற்ற சுந்தரர், உள்ளே சென்று, சிவபெருமானின் மலரனைய திருவடிகள் இரண்டையும் வழிபட்டு, உடம்பிற்குரிய அரிய செயலால் நிலத்தில் விழுந்து எழுந்து, பொருள் இன்பங்களைத் துய்த்தல் வழிவரும் இன்ப துன்பங்கள் அலைத்தல் பொருந்திய இவ்வுலக வாழ்க்கை தம்மைவிட்டு நீங்கத் 'தலைக்குத் தலைமாலை' எனத் தொடங்கும் தமிழ் மாலையாம் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார். *** 'தலைக்குத் தலைமாலை' எனத் தொடங்கும் திருப்பதிகம் இந்தளப்பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 4).
எடுத்த அத்திருப் பதிகத்தின்
உட்குறிப்பு இவ்வுல கினிற்பாசம்
அடுத்த வாழ்க்கையை அறுத்திட
வேண்டுமென்று அன்பர்அன் பினில்பாடக்
கடுத்த தும்பிய கண்டர்தங்
கயிலையிற் கணத்தவ ருடன்கூடத்
தடுத்த செய்கைதான் முடிந்திடத்
தங்கழற் சார்புதந் தளிக்கின்றார்.

[ 30]


'தலைக்குத் தலைமாலை' எனத் தொடங்கும் திருப்பதிகம் இந்தளப்பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 4). *** 'தலைக்குத் தலைமாலை' எனத் தொடங்கும் திருப் பதிகத்தில் 1, 2, 5, 6 ஆகிய பாடல்கள் வினாவுரையாகவும், ஏனை யவை இறை அருட்செயலைக் குறிப்பனவாகவும் அமைந்து உள்ளன. இவற்றுள் 8ஆவது பாடலில் 'வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன். ' எனும் குறிப்புளது. இதுவே அத்திருப்பதிகத்தின் உட்பொருளாகும் என்பது சேக்கிழாரின் திருவுள்ளமாகும்.
Go to top
மன்ற லந்தரு மிடைந்தபூங்
கயிலையின் மலைவல்லி யுடன்கூட
வென்றி வௌள்விடைப் பாகர்தாம்
வீற்றிருந் தருளிய பொழுதின்கண்
ஒன்று சிந்தைநம் மூரனை
உம்பர்வெள் ளானையில் உடன்ஏற்றிச்
சென்று கொண்டிங்கு வாருமென்று
அயன்முதல் தேவர்கட் கருள்செய்தார்.

[ 31]


நறுமணம் மிக்க அழகிய மரங்கள் நெருங்கிய திருக் கயிலாயத்தில், உமையம்மையாருடன் கூட, வெற்றி பொருந்திய வெண்மையான ஆனேற்று ஊர்தியின்கண் இறைவன் எழுந்தருளி இருந்தபோது 'நம்முடன் ஒன்றுபட்ட சிந்தனையுடைய நம் நம்பியா ரூரனைத் தேவருலகத்திலுள்ள வெள்ளை யானையுடன் சென்று அதன் மீது ஏற்றிக் கொண்டு இங்கு வாருங்கள்' என்று அயன் முத லான தேவர்களுக்கு ஆணையிட்டருளினார். *** இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.
வான நாடர்கள் அரிஅயன்
முதலினோர் வணங்கிமுன் விடைகொண்டு
தூந லந்திகழ் சோதிவெள்
ளானையுங் கொண்டுவன் தொண்டர்க்குத்
தேன லம்புதண் சோலைசூழ்

[ 32]


அவ்வருளாணையைக் கேட்டதேவர்களும், மால் அயன் முதலியவர்களும் இறைவரை முன் வணங்கி, விடைபெற்று, சுந்தரருக்காகத் தூய நன்மை விளங்கும் ஒளியுடைய வெள்ளை யானையையும் உடன் கொண்டு, தேன் பொழியும் சோலைகள் சூழ்ந்த மகோதை நகரத்தில் திருவஞ்சைக்களத்தைச் சேர அணையும் பொழுது, கால் நிலத்தில் பொருந்த வலமாக வந்து காவலையுடைய மதில் வாயிலை அணுகினார். *** தேவர்களின் கால்கள் நிலம் தீண்டாதன. இறைவன் ஆணையை மேற்கொண்டு, சுந்தரரை அழைத்துவரச் செல்ல வந்தமையின் திருவஞ்சைக்களத்தில் அவர்களின் கால்கள் நிலம் தீண்டுவனவாயின.
தேவர் தங்குழாம் நெருங்கிய
வாய்தனில் திருநாவ லூரர்தம்
காவல் மன்னரும் புறப்பட
எதிர்கொண்டு கயிலைவீற் றிருக்கின்ற
பூவ லம்புதண் புனற்சடை
முடியவர் அருளிப்பா டெனப்போற்றி
ஏவல் என்றபின் செய்வதொன்று
இலாதவர் பணிந்தெழுந் தெதிரேற்றார்.

[ 33]


இங்ஙனம் தேவர் குழுவினர் வந்து நெருங்கிய வாயிலின் வழியே, திருநாவலூர் மன்னரான நம்பியாரூரரும் தம் வழிபாடு நிறைவேறிய அளவில் வெளியே வர, தேவர்கள் எதிர் கொண்டு திருக்கயிலையில் வீற்றிருந்தருளுகின்ற கொன்றையணிந்த சிவபெருமான் தங்களை இவ்வெள்ளை யானை மீது ஏற்றி அழைத்து வரப்பணித்தது ஆணையாகும் என்று கூறிப் போற்ற, இஃது அப்பெருமானின் அருள் ஆணை என்பதையறிந்த நம்பிகள், வேறு செயல் ஒன்றும் இல்லாதவராய் வணங்கி, எழுந்து, எதிராக வந்து அவ்வருளாணையை ஏற்றருளினார்.
குறிப்புரை:

ஏற்ற தொண்டரை அண்டர்வெள்
ளானையின் எதிர்வலங் கொண்டேற்ற
நாற்ற டங்கடல் முழுக்கென
ஐவகை நாதமீ தொழுந்தார்ப்பப்
போற்றி வானவர் பூமழை
பொழிந்திடப் போதுவார் உயிரெல்லாம்
சாற்று மாற்றங்கள் உணர்பெருந்
துணைவரை மனத்தினிற் கொடுசார்ந்தார்.

[ 34]


இறைவரின் ஆணையை ஏற்ற தொண்டரான நம்பியாரூரரை, எதிர் வலம் செய்து, வணங்கித் தாம் கொணர்ந்த வெள்ளை யானையின் மீது ஏற்ற, நாற்றிசைகளிலும் உள்ள பெரிய கடல்களின் ஓசையைப் போன்று ஐவகைத் துந்துபிகளும் எழுந்து நம்பியாரூரர், திருவருளால் எல்லாவுயிர்களும் கழறும்சொற்களை அறிபவரான தம் பெருந்தோழரான சேரமான் பெருமாள் நாயனா ரைத் தம் உள்ளத்துள் எண்ணியவாறே, மேற்சென்றருளினார்.
குறிப்புரை:

சேரர் தம்பிரான் தம்பிரான்
தோழர்தஞ் செயலறிந் தப்போதே
சார நின்றதோர் பரியினை
மிசைக்கொண்டு திருவஞ்சைக் களஞ்சார்வார்
வீர வெண்களிறு உகைத்துவிண்
மேற்செலும் மெய்த்தொண்டர் தமைக்கண்டார்
பாரில் நின்றிலர் சென்றதம்
மனத்தொடு பரியும்முன் செலவிட்டார்.

[ 35]


சேரமான் பெருமானாரும் தம்பிரான் தோழரான சுந்தரரின் செயலை அறிந்து, அது பொழுதே, சார நின்றதான ஒரு குதிரையின் மேற்கொண்டு, திருவஞ்சைக்களத்தைச் சார, வீரமுடைய வெள்ளை யானையைச் செலுத்தி வானத்தின்கண் சென்று கொண் டிருக்கும் உண்மைத் தொண்டரான சுந்தரரைக் கண்டார். நிலத்தில் நிற்கலாற்றாதவராய்த் தமக்கு முன் விரைவாய்ச் செல்லும் தம் உள் ளத்துடன் குதிரையும் வெள்ளையானையின் முன்னால் செல்லும்படி செலுத்தினார். *** தம் மனத்துடன் குதிரையும் சென்றது என்றது குதிரையின் விருப்பமும் குறித்தவாறு. 'உள்ளம் போல உற்றுழி உதவும் புள்ளியற்கலிமா உடைமையான' (தொல். கற்பியல் - 53) எனத் தொல்காப்பியர் கூறுமாறு, அன்னதோர் உள்ளமும் குதிரையும் சேரர் பெருமாளாருக்கு உற்றுழியுதவும் பெற்றியவாயின.
Go to top
விட்ட வெம்பரிச் செவியினில்
புவிமுதல் வேந்தர்தாம் விதியாலே
இட்ட மாஞ்சிவ மந்திரம் ஓதலின்
இருவிசும் பெழப் பாய்ந்து
மட்ட லர்ந்தபைந் தெரியல்வன்
தொண்டர்மேல் கொண்டமா தங்கத்தை
முட்ட எய்திமுன் வலங்கொண்டு
சென்றது மற்றதன் முன்னாக.

[ 36]


அவ்வாறு செலுத்தப்பட்ட விருப்பமுடைய குதிரை யின் காதில், நில மன்னருள் முதன்மை பெற்ற மன்னரான சேரர், சிவாகம விதிப்படி எண்ணிவரும் தமக்கு விருப்பமான சிவ மந்தி ரத்தை ஓதினாராக, அதன் பயனாக அக்குதிரையும் பெரிய வானத்தில் எழும்பிப் பாய்ந்து சென்று, மணம் பொருந்திய மலர்ந்த மலர்களை யுடைய பசுமையான மாலையை அணிந்த வன்தொண்டர் மேற் கொண்டு சென்று கொண்டிருக்கும் வெள்ளை யானையை அணுகச் சென்று சேர்ந்து, முதலில் அதனை வலமாக வந்து, பின் அவ் யானை யின் முன் சென்றது. *** சிவமந்திரத்தின் பேராற்றால் இதனாலும் விளங்கும்.
உதியர் மன்னவர் தம்பெரும்
சேனையின் உடன்சென்ற படைவீரர்
கதிகொள் வாசியிற் செல்பவர்
தம்மைத்தங் கட்புலப் படுமெல்லை
எதிர்வி சும்பில் கண்டுபின்
கண்டிலர் ஆதலின் எல்லாரும்
முதிரும் அன்பினில் உருகிய
சுரிகையான் முறைமுறை உடல்வீழ்த்தார்.

[ 37]


சேரர் பெருமாள் குதிரையின் மீது எழுந்தருளிய பொழுதே, உடன் படையாகச் சென்ற வீரர்கள், மிகவிரைவாக, வானின் மீது செல்கின்ற தம் மன்னரைத் தம் கண்ணிற் புலப்படும் அளவும் வானத்தில் கண்டு, அதன் பின் காணாதவர் ஆயினர். அத னால் மனம் நெகிழ்ந்த படை வீரர்கள் அனைவரும் , அவரிடம் வைத்த பேரன்பினால், உருவிய தம் உடைவாளினாலே முறை முறையாய்த் தம் உடலை வீழ்த்தனர். *** இதனால் படை வீரர்கள் சேரர் பெருமாளிடத்துக் கொண்ட அன்பும், அவர்தம் வீரமும் புலப்படுகின்றன.
வீர யாக்கையை மேல்கொண்டு
சென்றுபோய் வில்லவர் பெருமானைச்
சார முன்சென்று சேவகம்
ஏற்றனர் தனித்தொண்டர் மேல்கொண்ட
வாரு மும்மதத் தருவிவெள்
ளானைக்கு வயப்பரி முன்வைத்துச்
சேரர் வீரருஞ் சென்றனர்
மன்றவர் திருமலைத் திசைநோக்கி.

[ 38]


அவ்வீரர்கள் தம் நுண்ணிய வீரவுடலை மேற் கொண்டு சென்று, சேரர் பெருமாளைச் சார முன்னே சென்று, அவரது பணியை ஏற்றனர். ஒப்பில்லாத பெருந்தொண்டரான சுந்தரர், மேற் கொண்ட மும்மதமும் அருவி எனப் பாய்கின்ற வெள்ளை யானைக் குக் கொற்றக் குதிரை முன்னே செல்ல, வீரர் தலைவரான சேரமானும் மறைவாணரின் கயிலைத் திருமலையினை நோக்கிச் சென்றனர்.
குறிப்புரை:

யானை மேல்கொண்டு செல்கின்ற
பொழுதினில் இமையவர் குழாமென்னும்
தானை முன்செலத் தானெனை
முன்படைத் தான்எனும் தமிழ்மாலை
மான வன்தொண்டர் பாடிமுன்
அணைந்தனர் மதிநதி பொதிவேணித்
தேன லம்புதண் கொன்றையார்
திருமலைத் தென்திசைத் திருவாயில்.

[ 39]


வெள்ளை யானையின் மீது ஏறிச் செல்கின்ற பொழுது, வானவர் கூட்டம் என்னும் படைமுன்னே செல்லத் 'தான் எனைமுன் படைத்தான்' எனத் தொடங்கும் தமிழ் மாலையைப் பெருமைமிக்க நம்பிகள் பாடியருளியவாறு, கங்கையையும் கொன் றையையும் சூடிய இறைவரின் திருமலையின் தெற்கு வாயிலின் முன் போய்ச் சேர்ந்தனர். *** 'தான் எனை முன்படைத்தான்' எனத் தொடங்கும் திருப்பதிகம், சுந்தரர் வெள்ளையானை மீது விண்வழிச் செல்லும் பொழுது தொடங்கி, திருக்கயிலையில் இறைவனைக் கண்டு மகிழும் வரையிலும் பாடிச் சென்ற பதிகம் ஆகும். பஞ்சமப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 100). இப்பதிகத்தின் முதல் இரு பாடல்கள் திருவஞ்சைக்களத்தில் வெள்ளையானையில் ஏறிய பொழுது பாடிய னவாம். 3 முதல் 6 வரை உள்ள பாடல்கள் யானையின் மீதிருந்து விண்வழியே செல்லும் பொழுது இறைவனின் பெருங்கருணைத் திறத்தை நினைந்து பாடியனவாகும். 7ஆவது பாடல் விண்வழிச் செல்லும் விரைவையும், வருணன் வரவேற்ற திறத்தையும் நினைந்து பாடியதாகும். 8ஆவது பாடல் கயிலையை அணுகிய நிலையில் அங்கு எழும் போற்றியுரைகள் பற்றி அருளியதாம். 9ஆவது பாடல் திருக் கயிலை சென்றதும், இந்திரன், மால், பிரமன் எழிலார் மிகு தேவ ரெல்லாம் எதிர் கொண்டு அழைத்துச் சென்றமையையும், அங்குள்ள முனிவர்கள் இவன் யார் என்னப் பெருமான், 'நம் தமர்; ஊரான்' என்றருளியமையையும் அருளியதாகும். 10ஆவது பாடல் இறையின் பத்தைச் சுவைத்த வண்ணம் அருளிய சுந்தரர், இப்பதிகத்தைத் திரு வஞ்சைக் களத்து இறைவருக்கு வருணன் வழி அனுப்பியமையை அருளியதாகும். இவ்வொன்பதாவது பாடற் கருத்தோடு, முன்னர்த் திருமலைச் சிறப்பில்கூறிய கருத்து மாறுபடாமல் கொள்ளல் வேண்டும். சுந்தரர் ஒளியுருவாய் வரக் கண்ட மாதவர், ஈதென்ன அதிசயம் என வினவ, உபமன்னியு முனிவர் திருவருளில் அழுந்திச் சிந்திக்க, இறைவன் நம் தமர் ஊரன் என அவருக்கு அறிவித்தருள, உணர்ந்த நிலையில், அம் மாதவருக்கு அவ்வொளியை வன்தொண்டன் எனவும், எந்தையார் அருளால் அணைவான் எனவும் கூறியருளினார். இது திருமலைச் சருக்கத்துட் கண்டது. இப்பதிகத்து வரும் ஒன்பதாவது பாடலோ, 'மந்திர மாமுனிவர் இவன் யார் என எம்பெருமான், நந்தமர் ஊரன் என்றான் நொடித்தான் மலையுத்தமனே' எனக் குறிக்கின்றது. நம் தமர் ஊரன் என்றான் என்பது, ஈதென்ன அதிசயம் எனவியந்த மாதவர் உபமன்னியு முனிவர் வினாவிற்கு விடையளித்தற்கு ஏற்ப இறைவன் உள்நின்றுணர்த்தியதாகும். யோக நெறியில் நின்ற சுந்தரருக்கு இந்நிலையறிய இயன்றமையின், அந்நிகழ்வைத் தம்பாடல் வழி எடுத்து மொழிவாராயினார். இவ்வகையில் அமைத்துக்கொள்ளல் வேண்டும்.
மாசில் வெண்மைசேர் பேரொளி
உலகெலாம் மலர்ந்திட வளர்மெய்ம்மை
ஆசி லன்பர்தம் சிந்தைபோல்
விளங்கிய அணிகிளர் மணிவாயில்
தேசு தங்கிய யானையும்
புரவியும் இழிந்துசே ணிடைச்செல்வார்
ஈசர் வௌள்ளிமா மலைத்தடம்
பலகடந் தெய்தினர் மணிவாயில்.

[ 40]


குற்றம் அற்ற வெண்ணிறத்துடன் கூடிய திருநீறு போன்ற போரொளி, உலகெலாம் விரிய, வளரும் மெய்ம்மையான குற்றம் அற்ற அன்பரின் உள்ளம் என ஓங்கி விளங்கிய அழகு மிக்க மலையின் அழகிய வாயிலில், ஒளியினையுடைய யானையினின்றும் குதிரையினின்றும் முறையே சுந்தரரும் சேரமானாரும் இறங்கி; நெடுந்தொலைவு செல்பவராகி, இறைவரின் பெரிய வெண்மையான மலையின் இடங்கள் பலவற்றையும் கடந்து, அழகிய மணிவாயிலை வந்து அடைந்தனர். *** இறைவன் எழுந்தருளி இருப்பதாலும் பெருமையும் தூய்மையும் நிலவுவதாலும் வாயிற்கு அன்பர் சிந்தை உவமை ஆயிற்று.
Go to top
அங்கண் எய்திய திருவணுக்
கன்திரு வாயிலின் அடற்சேரர்
தங்கள் காவலர் தடையுண்டு
நின்றனர் தம்பிரா னருளாலே
பொங்கு மாமதம் பொழிந்தவெள்
ளானையின் உம்பர்போற் றிடப்போந்த
நங்கள் நாவலூர்க் காவலர்
நண்ணினார் அண்ணலார் திருமுன்பு.

[ 41]


அங்குப் பொருந்திய திருஅணுக்கன் திருவாயிலில், வெற்றி பொருந்திய சேரமான் பெருமாள் நாயனார் உட்செல்ல இயலாமல் தடுக்கப்பட்டு நின்றனர். பொங்கும் கரிய மதநீர் பொழிந்த வெள்ளை யானையின் மேல் இறைவரின் திருவருளால் வானவர் சூழந்து போற்றிவர நம் பெருமானாரான நாவலூர்த் தலைவராய சுந்தரர், இறைவரின் திருமுன்பு சேர்ந்தார். *** திரு அணுக்கன் திருவாயில் - இறைவன் வீற்றிருக்கும் இடத்திற்கு முன்புள்ள திருவாயில்.
சென்று கண்ணுதல் திருமுன்பு
தாழ்ந்துவீழ்ந் தெழுந்துசே ணிடைவிட்ட
கன்று கோவினைக் கண்டணைந்
ததுவெனக் காதலின் விரைந்தெய்தி
நின்று போற்றிய தனிப்பெருந்
தொண்டரை நேரிழை வலப்பாகத்
தொன்றும் மேனியர் ஊரனே
வந்தனை என்றனர் உலகுய்ய.

[ 42]


உட்சென்று, இறைவரின் திருமுன்பு தொழுது விழுந்து வணங்கிப் பின் எழுந்து, நீண்ட காலம் நீண்ட தொலைவிடத் தில் விட்ட ஆன்கன்று, தன் தாய்ப் பசுவைக் கண்ட அளவில் ஆர்வம் பொருந்த அணைவதைப் போல, விரைவாகச் சென்று, நேர் நின்று போற்ற, ஒப்பிலாத பெரிய அத்திருத்தொண்டரான நம்பியாரூரரைப் பார்த்து, உமையம்மையுடன் கூடிய சிவபெருமான், 'நம்பி ஆரூரனே, உலகுய்ய வத்தனையோ' என்று வினவினர். *** சேண் - காலமும் இடமும் குறித்தது. 'ஈன்ற ஆன் கனைப்புக் கேட்ட கன்று போல்' (பா. 214), 'கன்றுதடையுண்டு எதிர் அழைக்கக் கதறிக் கனைக்கும் புனிற்றாப் போல்' (பா. 3882) என நம்பிகளைக் கன்றாகவும் பெருமானைப் பசுவாகவும் முன்னர்க் குறித்திருப்பனவும் காண்க.
அடிய னேன்பிழை பொறுத்தெனை
யாண்டுகொண் டத்தொடக் கினைநீக்கி
முடிவி லாநெறி தருபெருங்
கருணைஎன் தரத்ததோ எனமுன்னர்ப்
படியும் நெஞ்சொடு பன்முறை
பணிந்தெழும் பரம்பரை யானந்த
வடிவு நின்றது போன்றுஇன்ப
வெள்ளத்து மலர்ந்தனர் வன்தொண்டர்.

[ 43]


'அடியேன் செய்த பிழையைப் பொறுத்து என்னை ஆட்கொண்டு, பிழையால் போந்த அப்பிறப்பின் தொடர்பை நீக்கி, முடிவில் மீளாத நெறியான திருவடிப் பேற்றைத் தரும் பெருமானின் பெருங்கருணையானது என் சிறிய தகுதிக்குத் தக்கதோ?' எனப் போற்றித் திருமுன்பு, அச்சம் பொருந்திய உள்ளத்துடன் பன்முறையும் பணிந்து, மேன்மேலும் தொடர்ச்சியாய்ப் பெருகி வரும் ஆனந்தமே ஒருவடிவு கொண்டால் என்ன நிற்கும் வன்தொண்டர் பெருமான் பெருமகிழ்வுடன் திளைத்து நின்றார்.
குறிப்புரை:

நின்ற வன்தொண்டர் நீரணி
வேணியர் நிறைமலர்க் கழல்சாரச்
சென்று சேரலன் திருமணி
வாயிலின் புறத்தினன் எனச்செப்பக்
குன்ற வில்லியார் பெரியதே
வரைச்சென்று கொணர்கென அவரெய்தி
வென்றி வானவர்க் கருளிப்பாடு
எனஅவர் கழல்தொழ விரைந்தெய்தி.

[ 44]


இந்நிலையில் நின்றவராகிய நம்பியாரூரர், கங்கையை ஏற்ற சடையினரான இறைவரின் நிறைந்த மலர் போன்ற திருவடிகளின் அருகே சென்று, 'சேரமான் தாங்கள் வீற்றிருந்தருளும் இக்கோயிலின் மணியால் ஆன திருவணுக்கன் வாயில் புறத்தில் உள்ளார்' என்று விண்ணப்பித்துக் கொள்ள, மேருமலையை வில்லாக உடைய சிவபெருமான், நந்திதேவரை நோக்கி 'அவரைச் சென்று அழைத்து வருக! என்று ஆணையிட, அவரும் சென்று ஞான வெற்றியைப் பொருந்திய சேரரிடத்து 'உள்ளே வர ஆணை!' என்று தெரிவிக்க, உடனே அவரும் இறைவரின் திருவடியை வணங்குதற்கு விரைந்து வந்து, *** பெரிய தேவர் - நந்தி தேவர். வென்றி - வெற்றி; ஞானவெற்றி. பதி ஞானத்தாலன்றி இறைவனைக் கண்டு மகிழ இயலாது ஆதலின் இவ்வெற்றி அத்தகைய ஞானத்தால் பெற்ற வெற்றி ஆயிற்று. வானவர்க்கு - சேரமானாருக்கு, வானவரம்பர் எனப்பெயர் வழங்குதல் குறித்தது.
மங்கை பாகர்தந் திருமுன்பு
சேய்த்தாக வந்தித்து மகிழ்வெய்திப்
பொங்கும் அன்பினில் சேரலர்
போற்றிடப் புதுமதி அலைகின்ற
கங்கை வார்கடைக் கயிலைநா
யகர்திரு முறுவலின் கதிர்காட்டி
இங்கு நாம்அழை யாமைநீ
எய்திய தென்னென அருள்செய்தார்.

[ 45]


உமைஅம்மையை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமானின் திருமுன்பு சென்று, தொலைவில் நின்று தொழுது மகிழ்ந்து, மேன்மேலும் பெருகுகின்ற அன்பினால் போற்றி மகிழ, பிறையையும் கங்கையையும் கொண்ட நீண்ட சடையையுடைய இறைவர், திருப்புன்முறுவலினால் இனிய ஒளியைக் காட்டி, 'நாம் அழையாமல் நீ இங்கு வந்த காரணம் யாது?' என வினவியருளினார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
Go to top
அரசர் அஞ்சலி கூப்பிநின்று
அடியனேன் ஆரூரர் கழல்போற்றிப்
புரசை யானைமுன் சேவித்து
வந்தனன் பொழியுநின் கருணைத்தெண்
திரைசெய் வெள்ளமுன் கொடுவந்து
புகுதலின் திருமுன்பு வரப்பெற்றேன்
விரைசெய் கொன்றைசேர் வேணியாய்
இனியொரு விண்ணப்பம் உளதென்று.

[ 46]


சேரர் பெருமானும், தலைமீது கைகளைக் கூப்பி நின்று, 'அடியேன் நம்பியாரூரரின் திருவடிகளைப் போற்றியவாறு, அவர் அருளால் வெள்ளை யானையின் முன்னே அவரை வணங்கிய வாறு வந்தேன்; பெருமானின் மிக்குப் பொழியும் அருளாய தெள்ளிய அலையையுடைய கருணைப் பெருவெள்ளமானது அடியேனை உந்திக் கொண்டு வந்து இங்குப் புகுத்தியதால் பெருமானின் திருமுன்பு வந்தடையும் பேற்றைப் பெற்றேன். நறுமணம் மிக்க கொன்றை மாலையை அணிந்த சடையையுடைய பெருமானே! மேலும் ஒரு விண்ணப்பம் உள்ளது எனக் கூறி, *** புரசை - யானையின் கழுத்தில் கட்டும் கயிறு.
பெருகு வேதமும் முனிவரும்
துதிப்பரும் பெருமையாய் உனைஅன்பால்
திருவு லாப்புறம் பாடினேன்
திருச்செவி சாத்திடப் பெறவேண்டும்
மருவு பாசத்தை அகன்றிட
வன்றொண்டர் கூட்டம்வைத் தாய்என்ன
அருளும் ஈசருஞ் சொல்லுக
என்றனர் அன்பருங் கேட்பித்தார்.

[ 47]


'பெரிய மறைகளாலும் முனிவர்களாலும் போற்றுதற்கரிய பெருமையுடையவரே! உயிர்களொடு பொருந்தி நிற்கும் பாசப்பிணைப்பினின்றும் நீங்கிட, வன்தொண்டரின் கூட்டத் தைச் சார வைத்தவரே!' அன்பினால் பெருமானைப் புறப்பாட்டாலாய திருவுலாச் செய்யுள் ஒன்றைப் பாடினேன்; அதனை அருள் செய்து திருச்செவி சார்த்திக் கேட்டருள வேண்டும்' என்று வேண்டிக் கொள்ள; அருள் வள்ளலாய பெருமானும் 'கூறுக' என்றார். அன்பரான சேர மானும் உலாவைப் பாடி அவர் கேட்டருளுமாறு செய்தார். *** புறத்திணை ஏழனுள் பாடாண் திணை என்பதும் ஒன்று. இதன்கண் மக்களையல்லாது தெய்வத்தைப் பாடி மகிழும் திறனும் கூறப்பெறுகின்றது. அவ்வகையில், மானிடப் பெண்டிர் தெய்வத்தை நயப்பதாகவும் கூறப்படும். இதனைக் 'காமப்பகுதி கடவுளும் வரையார் ஏனோர் மருங்கினும் என்றார் புலவர்' என வரும் நூற் பாவும் விளக்கும். இவ்வகையில் பேதை முதலாயப் பேரிளம் பெண் ஈறாக ஏழு வகைப் பருவத்து மகளிரும் இறைவர் உலாவரக் கண்டு காமுறுவதாகக் கூறும் பாடலும் உளதாயிற்று. எனவே இதனை உலா எனக் கூறுவர். 'ஊரொடு தோற்றமும் உரத்ததென மொழிப' எனவரும் தொல்காப்பிய நூற்பா(?? ) இதற்குரிய இலக்கணமாகும். இவ்வரிய நூல் திருக்கயிலாய ஞான உலா என அழைக்கப்பெறும். பதினொன்றாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. இற்றைக்கும் காணும் உலா நூல்களில் இதுவே முதல் உலாவாகும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
சேரர் காவலர் பரிவுடன்
கேட்பித்த திருவுலாப் புறங்கொண்டு
நாரி பாகரும் நலம்மிகு
திருவருள் நயப்புடன் அருள்செய்வார்
ஊர னாகிய ஆலால
சுந்தரன் உடனமர்ந் திருவீரும்
சார நங்கண நாதராம்
தலைமையில் தங்கும் என் றருள்செய்தார்.

[ 48]


சேரமான் பெருமானார் அன்புடன் பாடிக் கேட்கு மாறு செய்த திருவுலாப் பாட்டினை ஏற்றுத் திருவுள்ளம் கொண்ட அம்மையப்பரான இறைவரும், நன்மை மிக்க திருவருளை வழங்கும் விருப்பத்தடன் அருளுபவராய் 'நம்பி ஆரூரனான ஆலால சுந்தர னுடன் இனிதமர்ந்து நீங்கள் இருவரும், நம்மை அணுக இருக்கும் நம் கணங்களுக்குத் தலைமை ஏற்று இங்கு உறைவீராக!' என்று அருள் செய்தார்.
குறிப்புரை:

அன்ன தன்மையில் இருவரும்
பணிந்தெழுந் தருள்தலை மேற்கொண்டு
மன்னும் வன்தொண்டர் ஆலால
சுந்தர ராகித்தாம் வழுவாத
முன்னை நல்வினைத் தொழில்தலை
நின்றனர் முதற்சேரர் பெருமானும்
நன்மை சேர்கண நாதராய்
அவர்செயும் நயப்புறு தொழில்பூண்டார்.

[ 49]


அவ்வருளிப் பாட்டை ஏற்ற இவரும், பணிந்து எழுந்து, இறைவரின் திருவருளைத் தலைமேற் கொண்டு ஏற்று நிலைபெற்ற சுந்தரர் பெருமான் ஆலால சுந்தரராகி, முன் தாம் தவறாது இயற்றி வந்த திருத்தொண்டில் தலைநின்றார். முதன்மையுடைய சேர மானாரும் நன்மையுடைய சிவகண நாதராகி அவர்கள் செய்யும் விருப்பம் மிக்க திருத்தொண்டை மேற்கொண்டார்.
குறிப்புரை:

தலத்து வந்துமுன் னுதயஞ்செய்
பரவையார் சங்கிலி யாரென்னும்
நலத்தின் மிக்கவர் வல்வினைத்
தொடக்கற நாயகி யருளாலே
அலத்த மெல்லடிக் கமலினி
யாருடன் அனிந்திதை யாராகி
மலைத்த னிப்பெரு மான்மகள்
கோயிலில் தந்தொழில் வழிநின்றார்.

[ 50]


இவ்வுலகத்தில் வந்து தோன்றிய 'பரவையார்' 'சங்கிலியார்' என்ற இருமகளிரும், வன்மையான வினைப் பாசம் நீங்க, உமையம்மையாரின் திருவருளினால், முன்னை நிலையில் மென்மையான அடியையுடைய கமலினியார் மற்றும் அனிந்திதை யார் என்ற முன்னைப் பெயருடைய தோழியர் ஆகி, மலைமகளா ரான உமையம்மையாரின் திருக்கோயிலில், தாங்கள் முன்பு செய்து வந்த திருத்தொண்டின் வழியே நிலைபெற்றனர்.
குறிப்புரை:

Go to top
வாழி மாதவர் ஆலால
சுந்தரர் வழியிடை அருள்செய்த
ஏழிசைத் திருப் பதிகம்இவ்
வுலகினில் ஏற்றிட எறிமுந்நீர்
ஆழி வேந்தனாம் வருணனுக்கு
அளித்திட அவனும்அவ் வருள்சூடி
ஊழி யில்தனி யொருவர்தம்
திருவஞ்கைக் களத்தில்உய்த் துணர்வித்தான்.

[ 51]


இவ்வுலகிற்கு நல்வாழ்வு தரும் மாதவரான ஆலால சுந்ததர் திருக்கயிலையை நோக்கி வரும் வழியில் பாடிய ஏழிசைப் பதிகத்தை இவ்வுலகத்தில் யாவரும் பெற்று உய்யும் பொருட்டு நம்பியாரூரர் அலை எறியும் கடற்குத் தலைவனாய வருணனிடம் தர, அவர் ஆணையின் வண்ணம் வருணனும் அந்த அருளிச் செயலைத் தலை மேற்கொண்டு, ஊழியிலும் அழியாத ஒருவரான சிவபெரு மானின் திருவஞ்சைக்களத்தில் சேர்த்து, அப்பதிகத்தை உணர்வித் தனர். *** இவ்வுண்மை திருநொடித்தான்மலைப் பதிகத்துவரும் 10ஆவது பாடலால் தெரியவருவதாகும். 'ஆழிகடலரையா அஞ்சை யப்பர்க்கு அறிவிப்பதே' என்பது நம்பியாரூரரின் திருவாக்காகும்.
சேரர் காவலர் விண்ணப்பம்
செய்யஅத் திருவுலாப் புறம்அன்று
சாரல் வெள்ளியங் கயிலையில்
கேட்டமா சாத்தனார் தரித்துஇந்தப்
பாரில் வேதியர் திருப்பிட
வூர்தனில் வெளிப்படப் பகர்ந்தெங்கும்
நார வேலைசூழ உலகினில்
விளங்கிட நாட்டினர் நலத்தாலே.

[ 52]


சேரநாட்டின் பேரரசரான சேரமானார் பாடிய அந்தத் திருவுலாப் புறப்பாட்டை விண்ணப்பித்த அன்று, சாரல்களை யுடைய வெள்ளி மலையில் உடனிருந்து கேட்ட மாசாத்தனார், அதனை ஏற்று இந்நிலவுலகத்திலுள்ள, மறையவர் வாழுகின்ற திருப்பிடவூரில் வெளிப்படுமாறு சொல்லியருள, நீர் மிக்க கடல் சூழ்ந்த இந்நிலவுலகினில் எங்கும் நன்மை மிக அத்திருக்கைலாய ஞான உலாச் செய்யுளும் விளங்குவதாயிற்று. *** திருப்பிடவூர் - திருச்சிராப்பள்ளியிலிருந்து பெரம்பலூர் சாலையில் உள்ள சிறுகனூருக்கு வடமேற்கே இருநாழிகை அளவி லுள்ளதாகும். இங்குள்ள சாத்தனார் தம் திருக்கையில் திருவுலா ஏடு அமைந்தவாறுள்ளது.
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.

[ 53]


எக்காலத்தும் எவ்விடத்தும் சிவபெருமானிடத்துக் கொள்ளும் இன்பம் பெருகும் இயல்போடு, அப்பெருமானை ஒன்று பட்ட உணர்வினார் பத்திமை கொள்ள, அவ்வுயிர்தானும் மேன்மே லும் சிறந்து திருவருள் இன்பத்தில் திளைக்குமாறு, தில்லைப் பேர வையில் திருக்கூத்து இயற்றிவரும் பெருமானுடையவும் அப்பெரு மானின் அடியவருடையவும்ஆன, பொருள்சேர்புகழ் நுவலும் இந்நூல், உலகெலாம் நிலவி நிலைபெற்று விளங்கும் என்பதாம். *** எனவே இந்நூல், உயிர்கள் இறைவனிடத்துக் கொள்ளும் அன்பு பெருகப் பத்திமை கொள்ளும் உணர்வினால், அத்திருவருள் இன்பத்தில் திளைத்து ஓங்க என்றும் நிலைபெற்று விளங்கும் என்ப தாம். முன் இந்நூற்பயன் கூறுங்கால் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற பொங்கிய இருள் நீங்கும் என்றார் ஆசிரியர். நிறைவாக இத்திருப் பாடலில் உயிர்கள் இறையருள் இன்பத்தில் திளைக்க இந்நூல் எங்கும் நிலவி நிற்கும் என்று அருளுகின்றார். இவ்விரு திறனையும் ஒருங்கு நோக்கின் பாச நீக்கமும் சிவப்பேறுமே இந்நூற் பயன் என்பது தெளியலாம். ஒன்று காதலித்து - ஒன்றுபட்ட உணர்வோடு பத்திமை கொள்ள. உள்ளம் - உயிர்; 'காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்' (சிவஞான சூத். 11) என்புழிப் போல. இனி, ஒன்று என்பது ஒருவனாக விளங்கும் இறைவரை உணர்த்தும் சொல்லாகக் கொண்டு, பெருமானாரிடத்துப் பத்திமை கொள்ள என்று உரைத்தலுமாம். 'ஒன்றென்றது ஒன்றே காண் ஒன்றே பதி' எனவரும் ஞானநூற் கூற்றும் காண்க. 'உலகம்' என நிறைவுற நிற்கும் இச்சொல், பெருமானால் ஆசிரியருக்கு எடுத்துக் கொடுக்கப்பட்ட முதற் சொல்லாகும். 'முந்திய முதல் நடு இறுதியுமானாய்' (தி. 8 ப. 20 பா. 8) என இறையுண்மை கூறப் படுமாறு போல, அவ்விறைவனால் அருளப்பட்ட இச்சொல் முந்திய முதலும் இறுதியுமாக அமைக்கப்பெற்றிருக்கும் திறம் அறிந்து இன்புறத் தக்கதாம். 1, 2114, 4281 ஆகிய பாடல்களில் இவ்வரிய சொல் வருதல் காண்க. இம்மூவிடத்தன்றி, 356, 454, 901, 1124, 1766, 2113, 2540, 2756, 3241, 4005, 4214, 4261, 4274, ஆகிய எண்ணுடைய பாடல்களிலும் வருதல் அறிந்து இன்புறத் தக்கதாம். இவ்வாறே இந்நூலை அருளிச்செய்யக் காரணமாய் இருந்த அநபாய சோழனின் பெயரையும் பத்து இடங்களில் செய்நன்றி மறவாமல் சேக்கிழார் குறித்துள்ளமையும் அறிந்து மகிழத்தக்கதாம். அப்பாடல்களாவன 8, 22, 85, 98, 404, 552, 1212, 2744, 3947, 4203. வெள்ளானைச் சருக்கம் முற்றிற்று. இரண்டாம் காண்டம் முற்றிற்று. திருத்தொண்டர் புராணம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம் - 4,274திருச்சிற்றம்பலம்.
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.

[ 54]




Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song